மகாத்மா காந்தி பிறந்தநாளை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் இன்று நடைபெற்றன. இந்த கூட்டத்தை காணொளியில் துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான். திராவிட மாடல் ஆட்சி அமைந்தபிறகுதான் முறையாக தடங்கல் இன்றி கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறோம்.
உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயக தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடந்ததை உத்திரமேரூர் கல்வெட்டுதான் கூறுகிறது. கிராம சபைகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நலன், முதியோர் நலன் உள்ளிட்டவற்றில் கிராமசபை கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சோழர் காலம் முதல் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன; ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அனைவரது கருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டும். மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.