அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் உதயநத்தம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு நடத்துவதற்கு ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி உதயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுவதற்காக வேண்டி மனுக்களுடன்
வந்திருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறாமல் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்காக காத்திருந்தனர்.
மதியம் 2 மணி வரை பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் முறைப்படி கூட்டம் நடத்தப்படாததால் அதிருப்தி அடைந்து மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இச்சம்பவம் காரணமாக உதயநத்தம் ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில் அடிப்படை வசதிகள் வேண்டி மனு அளிப்பதற்காக கிராம சபை கூட்டத்திற்கு வந்தோம். ஆனால் திட்டமிட்டபடி கூட்டம் நடத்தப்படாததால் எங்களது கோரிக்கைகளை முறைப்படி தெரிவிக்க முடியவில்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் எங்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.