தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி சமீபத்தில் பாஜவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தான் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறியிருந்தார். அதன்படி, சபாநாயகர் அப்பாவு விஜயதாரணியின் பதவி விலகல் ஏற்கபட்டதாக அறிவித்தார்.
இந்நிலையில், விஜயதரணி தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கடிதம் எழுதினார். இதன் எதிரொலியாக பிப்ரவரி 24 முதல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியானதாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து பேரவை தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகவும் செயலர் கடிதத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.