விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரைவேட்புமனு தாக்கல் நடந்தது. 24-ம்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து, 26-ம் தேதி இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ள நிலையில், திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ,
இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு நடைபெறும் விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனியும், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வினியோக அதிகாரியும் தங்கள் அலுவலகங்களில் இருந்து கண்காணிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வேட்பாளர்கள் அன்னியூர் சிவா, அன்புமணி, அபிநயா ஆகியோரும் தங்கள் சொந்த ஊர்களில் வாக்களித்தனர்.
காலை 9 மணி வரை 12.94 சதவீதமும், 11 மணி வரை 29.97% வாக்குகளும் பதிவாகி இருந்தது. 12 மணி அளவில் 40 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். மக்களிடம் உள்ள ஆர்வத்தை பார்க்கும்போது 75 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு ஆகலாம் என வாக்குச்சாவடி நிலவரங்களை பார்வையிட்ட பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இத்தேர்தலில் 1,16,962 ஆண்கள், 1,20,040 பெண்கள், 29 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 42 மையங்கள் பதற்றமானதாகவும், 3 மையங்கள் மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது.