: ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்து நீதிமன்ற தடைகளை தாண்டி நேற்று மாலை 6 மணிக்கு மேல் தான் உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. காலையில் டிக்கெட் வாங்கி காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் காத்திருந்து மாலை காட்சியை நேற்று முதலே தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். உடன் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் உள்ளிட்டார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிராமத்து பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது படத்தின் டிரைலர் வெளியான போதே தெரிந்தது. இதுவரை இல்லாத புது முயற்சியாக ஒரு படத்தின் முதல் பாகம் வெளியாகும் முன்னரே இரண்டாம் பாகம் நேரடியாக வெளியாகியுள்ளது. ஆம், தற்போது வெளியாகி உள்ளது வீர தீர சூரன் படத்தின் 2ஆம் பாகம்.
படம் எப்படி இருக்கிறது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சினிமா விமர்சகர்கள் என அனைவரும் பாசிட்டிவாகவே கூறி வருகின்றனர். கிட்டத்தட்ட 5 மார்க்கிற்கு 3,4 என மதிப்பீடு அளித்து வருகின்றனர். படத்தின் எதார்த்தமான களம், அதனை படமாகிய விதம் என அனைத்தும் பாராட்டப்படுகிறது. முக்கியமாக விக்ரமின் நடிப்பு அபரிவிதமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜி.வி.பிரகாஷின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது என்றும், ஒரு குறிப்பிட்ட 15 நிமிட சிங்கிள் ஷாட் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது என்றும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஒரு கதைக்காக உடலை வருத்தி உடல் எடையை ஏற்றி இறக்கி அந்த கதாபாத்திரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் விக்ரம் சற்று அதிலிருந்து விலகி பழைய கமர்சியல் ஹீரோ தூள் பட விக்ரம் போல இந்த படத்தில் ரசிகர்களுக்காக இறங்கி அடித்துள்ளார் என்றே இன்றைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு நீண்ட வருடங்களாக கமர்சியல் வெற்றிக்காக போராடிவரும் விக்ரமிற்கு இந்த படம் மிக் பெரிய கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.