விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா, தேஜ கூட்டணியில் பாமக வேட்பாளர் அன்புமணி, நாம்தமிழர் கட்சியில் அபிநயா மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக மற்றும் தேமுதிக போட்டியிடவில்லை. கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற பிரசாரம் 8ம்தேதி மாலை ஓய்ந்தது. தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆண் வாக்காளர்கள் 1,16,962, பெண் வாக்காளர்கள் 1,20,040, திருநங்கைகள் 29 பேர் என மொத்தம் 2,37,031 பேர் வாக்களிக்க ஏதுவாக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தேர்தலையொட்டி இந்த தொகுதிக்கு மட்டும் நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மிக பதற்றமான 3 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 44 பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 2,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திமுக வேட்பாளர் அன்னியூர்சிவா காலை 7 மணிக்கே அன்னியூரில் குடும்பத்துடன் முதல்நபராக வந்து வாக்களித்தார். இதேபோல், பாமக வேட்பாளர் அன்புமணி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பனையபுரம் அரசு பள்ளி வாக்குசாவடியில் வாக்களித்தார். காலை 9 மணி நிலவரப்படி 12.94% வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 29.97% வாக்குகளும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 50.95% வாக்குகளும் பதிவாகின. 3 மணி நிலவரப்படி 64.44% வாக்குகளும், 5 மணி நிலவரப்படி 77.73% வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2019 இடைத்தேர்தலைவிட 6.48% கூடுதலாகும். கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இங்கு 72.78 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இதை ஒப்பிடுகையில் 9.7% அதிகமாகும்.