திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு(54). இவர் மீது பல ஊழல் புகார்கள் வந்ததால் துறை ரீதியான விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து முத்தரசுவை நெல்லை மாவட்ட ஆவண காப்பக டிஎஸ்பியாக சில மாதங்களுக்கு முன் இட மாற்றம் செய்தனர்.
ஆனாலும் அவர் குறுகிய காலத்தில் அங்கிருந்து திருச்சிக்கு மீண்டும் மாறுதலாகி வந்தார். திருச்சியில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக ஒரு மாதத்திற்கு முன் பதவி ஏற்றார். தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. பல இடங்களில் அவர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து, இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொரைஸ் சிட்டியில் உள்ள டிஎஸ்பி முத்தரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். டிஎஸ்பி வீட்டில் நடைபெறும் இந்த லஞ்ச ஒழிப்பு வேட்டை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிஎஸ்பி முத்தரசு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்.