தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விகடன் பதிப்பகம் சார்பில்.” எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” என்ற பெயரில் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் இந்த நூலை வெளியிட்டார். இதில் பேசிய விஜய், கூட்டணி அழுத்தம் காரணமாக விசிக தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறினார். அவர் விழாவில் கலந்துகொள்ளாவிட்டாலும் அவரது நினைப்பு முழுக்க இந்த விழாவை பற்றி தான் இருக்கும் எனவும் விஜய் கூறினார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்திருக்கிறது என்பது மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் அங்கே இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என்பது விஜய்க்கு வருத்தம். ஒரு ஆதங்கம், அதனால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார். மற்றபடி எனக்கு எந்த நெருடலும் இல்லை. நான் சுதந்திரமாக எடுத்த முடிவு இது. கட்சியின் நலன் கருதி, கூட்டணியின் நலன் கருதி எடுத்த முடிவு. நான் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருந்தால் அதனை திசைதிருப்பு அரசியல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இடம் தர கூடாது என்பதற்காகவே பங்கேற்கவில்லை என கூறினார்.