தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது கேரளாவில் இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் அவர் முன் ஜாமீன் கேட்டு கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் ஐகோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்.
அதற்குள்ட போலீசார் தன்னை கைது செய்து விடக்கூடாது என்பதற்காக கடந்த 14 நாட்களுக்கு மேலாக எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து 3 தனிப்படை போலீசார் தமிழக பகுதிகளிலும், 4 தனிப்படை போலீசார் வட மாநிலங்களிலும் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் தம்பி சேகரையும் போலீசார் கைது செய்யலாம் என்ற தகவலை அடுத்து சேகரும் தலைமறைவாகி உள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு தொடர்பாக உண்மையான ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.