கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 3 பேர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை – கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் சிபிசிஐடி சோதனை.
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலமாக போலி ஆவணங்களை தயாரி்த்து, மோசடியாக எழுதி பெற்றதாக புகார் உள்ளது. இது குறித்து கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் தனிப்படை குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விஜயபாஸ்கர் தலைமறைவானார். போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என பயந்து கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இடைக்கால முன்ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றபோது வழக்கு 5ம் தேதிக்கு( இன்று) தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் வங்கியில் பணிபுரிந்து வந்த யுவராஜ் என்பவரது வீட்டில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான 4 போலீசார் கரூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.
இதேபோல் வேலாயுதம்பாளையம் செல்வராஜ், கவுண்டம்பாளையம் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு மேற்கண்ட நான்கு இடங்களிலும், சொத்து மோசடி வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் விஜயபாஸ்கர் அங்கு பதுங்கி இருக்கிறாரா என்றும் சோதனை போட்டனா். இதற்காக போலீஸ் வேன், கார்களில் போலீசார் அங்கு வந்தனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டரை மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுபோல கோபை, வேலூர் நகரங்களிலும் 3 இடங்களில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அங்கும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆவணங்களை பதுக்கி வைத்ததன் மூலம் விஜயபாஸ்கரின் மேற்கண்ட நட்பு வட்டாரங்களையும் விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.