வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால், விஜய் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஏற்கனவே ரஞ்சிதமே, ரஞ்சிதமே என்ற பாடலும், தீ தளபதி பாடலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று 3வது பாடல் வெளியானது. மகனை தேடிய அம்மாவின் தவிப்பும், மகனை கண்டவுடன் அம்மாவிடம் இருந்து வரும் பெருமூச்சும் எப்படி இருக்குமோ, அதுபோன்று பாடல் வரிகளை எழுதியுள்ளார் விவேக். இப்பாடலை கேட்ட ரசிகர்கள் அம்மாவின் அன்பை நினைத்து உருகியுள்ளனர்.
ஆராரிராரிரோ கேட்குதம்மா” என தாலாட்டு போல இந்தப் பாடலை பாடத் தொடங்கும் சித்ரா, அப்படியே அம்மாவாகவே மாறிவிடுகிறார். “நான் கண்ட காயங்கள் போகுதம்மா, நொடியும் மெல்லிசை ஆகுதம்மா. பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா” போன்ற வரிகளும், அதனை சித்ரா பாடிய விதமும் கேட்பவர்களுக்கு சிலிர்ப்பான அனுபவத்தை தருகிறது. மேலும், இந்தப் பாடலின் கிராபிக்ஸ் விஷுவலை பார்க்கும் போது, பல நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் விஜய்யை, அவரது அம்மா வாரி அணைத்து அழைத்து செல்வது போல தெரிகிறது. இதுவே படத்தின் ஒன்லைனாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.