தமிழக முதல்வரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் செயல்படும் அனிதா அகாடமியில் பயின்றவர்களுக்கு சான்றிதழ் , தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
எவ்வளவு பணிச்சுமைகள் இருந்தாலும் கொளத்தூருக்கு வந்தால் மனமகிழ்ச்சியாக இருக்கிறது. நீட் தேர்வு தங்கை அனிதாவின் உயிரை பறித்தது. ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது. என்றைக்காவது ஒருநாள் நீட் தேர்வை ரத்து செய்து, மக்களின் கோரிக்கைக்கு பணிந்து தான் ஆகப்போகிறது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். என்றைக்காவது ஒரு நாள் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் நிறைவேற்றும். தமிழக மக்களின் குரலுக்கு ஒன்றிய அரசு பணியத்தான் போகிறது.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். மற்ற வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழ்நாடு பல துறைகளில் முன்னணியில் இருக்கிறது. தமிழகம் பல துறைகளில் முதன்மை மாநிலமாக உள்ளது. இதற்கு காரணம் கோட்டையில் இருந்து நாம் திட்டங்களை அறிவித்து விட்டு போய்விடுவதில்லை. நிதியை ஒதுக்கிவிட்டு அப்படியே போய்விடுவதில்லை. அதை தொடர்ந்து கண்காணிக்கிறோம். களத்தில் போய் ஆய்வு செய்கிறோம். அதற்காகத்தான் நாளைக்கு கோவை செல்ல இருக்கிறேன்.
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறேன். ஏற்கனவே முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறேன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறேன் திட்டங்களை விரைவுபடுத்த ஆலோசனைகள் வழங்க இருக்கிறேன். இது அச்சீவ்மெண்ட் அரசாக செயல்படுகிறது. அதனால் தான் தமிழ்நாட்டிற்கு முதலீட்டார்களாக வருகிறார்கள்.
சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியபோது முதலமைச்சரே வராத ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று மழை பெய்த உடன் உடனடியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் சில ஊடகங்கள் கடந்தஆண்டு வெள்ளத்தை படம் பிடித்து ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது என்கிறார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சில ஊடகங்களை சொல்கிறேன். நான் அவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. புதிது, புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுக அழிய வேண்டும் என பேசுகிறார்கள். வாழ்க வசவாளர்கள் என அண்ணா கூறியதை மனதில் வைத்து செயல்படுகிறோம். எங்கள் பணி தொடர்ந்து கொணடே இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, முத்துகருப்பன், மேயர் பிரியா ஆகியோரும் பங்கேற்றனர்.
.