போலி கணக்குகளை தொடங்கி நடிகை வித்யா பாலன் பெயரில் மோசடி செய்த நபர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரில் போலி இன்ஸ்டா., கணக்கை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக புகார் வந்தது.
இதுதொடர்பாக மும்பை காவல்துறையிடம் வித்யா பாலன் புகார் அளித்தார். அதையடுத்து போலி ஐடியை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபர் மீது தகவல் தொழில்நுட்பத்தின் 66 (சி) பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிந்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நடிகை வித்யா பாலனை, சமூக வலைதள பக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். அவர்களில் ஒருவர், வித்யா பாலன் பெயரில் போலி கணக்கை தொடங்கி அதன் மூலம் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தார். மேலும் அந்த நபர் வித்யா பாலன் பெயரை பயன்படுத்தி, ஜி-மெயில் கணக்கை உருவாக்கி பாலிவுட் பிரபலங்களை தொடர்பு கொண்டுள்ளார்.
அதேபோல் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மக்களிடம் பணம் பறித்துள்ளார். அதையடுத்து வித்யா பாலன் அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை சைபர் கிரைம் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்றனர்.