கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல கண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு .ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும், பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய மூன்று மாவட்ட நீதிபதிகளையும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது. இவர்களில் வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகள் கலைமதி, திலகவதி ஆகியோரை சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதை அடுத்து, சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.35 மணிக்கு பதவியேற்பர் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெறும் நிகழ்வில், புதிய கூடுதல் நீதிபதிகளுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைக்க இருந்தார்.
இந்த நிலையில் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதுபோல மேலும் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். விக்டோரியா சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர். அவரை நீதிபதியாக நியமிக்க கூடாது என வழக்கில் கூறி இருந்தனர்.
இந்த வழக்கு இன்று காலை 9.15 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன் விசாரணைக்கு வர இருந்த நிலையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த விவாசரணை 10.30 மணிக்கு தொடங்கியது.
விக்டோரியா கவுரி வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி உள்ளார். அவர் அரசியல் சார்புடையவர் என்பது மட்டும் அல்ல. அவரது பேச்சு அரசியல் பேச்சு அல்ல. எனவே அவர் நீதிபதியாக தகுதியற்றவர் என அறிவிக்க வேண்டும் என மனு தாரர் சார்பில் வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதிகளில் ஒருவரான கவாய், நானும் அரசியல் சார்புடையவர் தான். 20 ஆண்டுகளாக நீதிபதியாக இல்லையா, பல அரசியல் தொடர்பு உடையவர்கள் நீதிபதியாக வந்து உள்ளனர். கொலிஜீயம் எல்லாவற்றையும் ஆலோசித்து தான் அவரை நியமித்து உள்ளது. உங்களுக்கு கொலிஜியம் மீது நம்பிக்கை இல்லையா? விக்டோரியாவின் பேச்சு, எழுத்துக்கள் கொலிஜியத்துக்க கிடைக்காமல் போய் இருக்கலாம். யூகங்கள், அனுமானங்கள் அடிப்படையில் செயல்படமுடியாது. இ ந்த நேரத்தில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் கூறினர். பின்னர் எதிர்தரப்பு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். பார் கவுன்சிலில் விசாரித்தபோது விக்டோரியா மீது எந்த புகாரும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சென்னை ஐகோர்ட்டில் காலை 10.50 மணிக்கு நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு)டி.ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுபோல மற்ற 4 நீதிபதிகளும் பதவி ஏற்றனர்.