திருக்கருக்காவூர் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா திருக்கருக்காவூர் சுற்றுவட்டார பகுதியின் முக்கிய பாசன ஆறுகளில் ஒன்றான வெட்டாறு தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆற்றின் முழுபரப்பையும், நாணல்கள், புல்பூண்டுகள், மற்றும் நெய்வேலி காட்டாமணக்குகள் காடுகளை போல ஆக்கிரமித்து தற்போது வாய்க்காலை போல் காட்சியளிக்கிறது.
இதனால் வெட்டாற்றின் மூலம் பாசனம் பெறும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் சரியான பாசன வசதி பெறாமல் விவசாயப் பணிகள் பாதிக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.
சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வெட்டாற்றின் பெரும் பகுதியில் மணல் திட்டுகள் போல் உருவாகி உள்ளதால், விவசாயம் செய்வதும் படிப்படியாக குறைந்து கொண்டே போகும் அபாயம் உள்ளது. விவசாயத்தை பாதுகாக்க இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே வெட்டாறு உள்பட பாசன ஆறுகளை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே திருக்கருக்காவூர் பகுதி விவசாயிகள் வெட்டாற்றை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.