அரியலூர் மாவட்டம், அரியலூர் கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்து, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை பார்வையிட்டார்.
ரேபிஸ் எனும் வெறிநோய் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் கொடிய நோயாகும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் பரவுவதை தடுக்க முடியும்.
உலக சுகாதார நிறுவனம் இந்த வருடம் உலக வெறி நோய் தடுப்பூசி தினத்தினை “ரேபிஸ் எல்லைகளை உடைப்போம்” என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது. இது ஒரு ஆபத்தான வைரஸ். கிருமி நாசினியால் இந்த வைரஸ் அழிக்கப்படக்கூடியது. உலர்ந்த சில மணி நேரங்களில் இந்த வைரஸ் இறந்துவிடும். இந்த நோய் 100 சதவீதம் தடுக்கப்படக்கூடியது. அறிகுறிகள் தென்படும் முன்பே நோய் தடுப்பு மூலம் தடுக்க இயலும். ஆனால் நோய் அறிகுறிகள் தென்பட்டு விட்டால் மரணம் தவிர்க்க முடியாதது.
பாதிக்கப்பட்ட நாய் மற்றும் பூனை மற்ற விலங்குகளை மற்றும் மனிதர்களை கடிப்பதன் மூலம் நோய் தொற்று பரவுகிறது. ரேபிஸ் வைரஸ் தோல் காயங்கள், பல் காயங்கள், கண் விழித்திரை ஆகியவற்றின் மீது படும்பொழுது
நரம்பு மண்டலம் வழியாக மூளையினை பாதிக்கிறது. நாய்களுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் ஆடைகள் மூலமாக பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தெருநாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு முதற்கட்டமாக வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் என்ற திட்டத்தின் கீழ் 4,260 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி பெறப்பட்டு நோய் தடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது .இன்றைய முகாமில் 59 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது. எனவே, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
இம்முகாமில், மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ஹமீது அலி, உதவி இயக்குநர்கள் முருகேசன், மூக்கன், செல்லப்பாண்டி, கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை உதவியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.