திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்த்தாம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகள் மீனா (வயது 18). இவர் திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். வாரத்தில் முதல் நாள் என்பதால் கல்லூரியில் அசம்பிளி ஹாலில் கூடுவது வழக்கம். அதன்படி இன்று காலை அனைத்து மாணவிகளும் அந்த அரங்கில் ஒன்று கூடினர். கல்லூரி முதல்வர் மாணவிகளிடம் பேசிக் கொண்டு இருந்தபோது கூட்டத்துக்குள் கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பு புகுந்தது.
இதனால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். அப்போது வேகமாக சென்ற பாம்பு மீனாவை கடித்தது. இதனால் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து மீனாவை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் கல்லூரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். இறந்த பாம்புடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு மீனாவை சிகிச்சைக்கு கொண்டு வந்து டாக்டரிடம் அந்த பாம்பையும் காண்பித்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.