புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த பிரச்னை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு சென்ற நிலையில், இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர். வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இன்று வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களை சேர்ந்த ஊராட்சித்தலைவர் முத்தையா, மற்றும் பயிற்சி போலீஸ்காரர் முரளி ராஜா உள்பட 8 பேரை சிபிசிஐடி விசாரணைக்காக போலீசார் திருச்சி அழைத்து உள்ளனர். திருச்சி ஜெயில் கார்னரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அவர்கள் இன்று வந்தனர். அவர்களிடம் டிஎஸ்பி பால்பாண்டி விசாரணை மேற்கொள்கிறார். இந்த வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.