புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் முதற்கட்டமாக 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதில் 8 பேர் பரிசோதனைக்கு வர மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டு மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. இதுவரை மொத்தம் 11 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், வர மறுத்த 8 பேரில் ஒருவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தங்களை துண்புறுத்துவதற்காகவே சிபிசிஐடி போலீசார், இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை விசாரித்தை மதுரை கிளை, டி.என்.ஏ.பரிசோதனை நடத்தினால் மட்டுமே இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படும் என சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளதால், அவர்களை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இந்த நிலையில், வர மறுத்த 8 பேருக்கு டி.என்.ஏ.பரிசோதனை நடத்த மீண்டும் அழைப்பானை அனுப்புவது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 சிறார்களுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவேண்டும் என்று சிறார் நீதிமன்றத்தில் இன்று சிபிடிசிடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, வர மறுத்த 8 பேர் மற்றும் 4 சிறார்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு விரைவில் டி.என்.ஏ பரிசோதனை நடைபெறவுள்ளது.