வேலூர் அருகே பாலமதி மலையில் முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. தகவலறிந்து பாகாயம் போலீசார் சென்று விசாரித்தனர். இளம்பெண்ணை அடித்து, முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஒரு வாலிபர் பைக்கில் இளம்பெண்ணை அழைத்துச்செல்லும் காட்சிகளும், சில மணி நேரம் கழித்து அந்த வாலிபர் மட்டும் தனியாக திரும்பும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், அந்த வாலிபரின் பைக் எண்ணை வைத்து விசாரித்தனர். அதில் அந்த வாலிபர் வேலூர் ஜீவாநகரை சேர்ந்த எஸ்ஐ ரமேஷின் மகன் கார்த்தி(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவருடன் பைக்கில் சென்ற இளம்பெண் சிதம்பரத்தை சேர்ந்த குணப்பிரியா(22) என்பதும், அவரை அடித்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். கார்த்தி அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: எஸ்ஐயின் மகனான கார்த்தி, சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த குணப்பிரியாவுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். பின்னர் செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கார்த்தி, குணப்பிரியாவை வள்ளிமலை கோயிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே கார்த்தி மனைவியுடன் நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் கர்ப்பமடைந்த குணப்பிரியா மீண்டும் சென்னையில் தங்கி வேலைக்கு சென்றுள்ளார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த குணப்பிரியாவை கடந்த 25ம் தேதி பைக்கில் கார்த்திக் அழைத்துக்கொண்டு பாலமதிக்கு சென்றார். அங்கு குணப்பிரியா, ‘வீடு வாடகைக்கு எடுத்து தங்கலாம். அல்லது உனது வீட்டிற்கு அழைத்துச்செல்’ என கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டையால் குணப்பிரியாவின் தலை மற்றும் முகத்தின் மீது கார்த்திக் சரமாரி தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்துவிட சடலத்தை மலையின் மேலிருந்த கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கார்த்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.