கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி நோக்கி செல்ல இருந்த லாரி ஒன்று, வெள்ளக்கிணறு ரயில்வே கேட்டை கடக்கும் நேரத்தில் உயர்த்தியவாறு இருந்த கேட்டின் பக்கவாட்டில் மோதியுள்ளது. இதில் ரயில்வே கேட் பாதி சேதமடைந்துள்ளது. இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்த கேட்டுக்கான அனைத்து இணைப்புகளையும் துண்டித்து விட்டு கோவை ரயில் நிலையத்திற்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர்.
இதனை அடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் பேசஞ்சர் ரயிலை தாமதமாக வரும்படி தகவல் அளித்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து தாமதமாக புறடப்பட்ட அந்த ரயில் சம்பவ
இடத்தை கடக்கும் வரை மெதுவாக வந்து அவ்விடத்தை கடந்த பின் வேகம் எடுத்து கோவை நோக்கி சென்றது. மேலும் 10 மணி அளவில் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக சென்னை நோக்கி செல்ல உள்ளதால் அந்த ரயில் சம்பவ இடத்தை கடந்த உடன் பழுதடைந்த அந்த ரயில்வே கேட்டை முற்றிலுமாக சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள ரயில்வே துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இது குறித்து லாரியின் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அதனை சரி செய்யும் முழு செலவையும் லாரியின் நிறுவனமே அளிக்கும்படி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.