தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (62) என்பவர் தனது மகள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது மருமகன் சிலம்பரசன் (39). இவர் கடந்த 12.2.2024ம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு கடந்த 25ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக பிரான்ஸ்சில் உள்ள எங்கள் ஊரை சேர்ந்த வாலிபர் மூலம் தகவல் தெரிய வந்தது. எனது மருமகன் உடலை தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கஜேந்திரன் தெரிவிக்கையில், எனது மகள் தணிகை (36). எனது மருமகன் சிலம்பரசன். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 12ம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்காக சிலம்பரசன் புறப்பட்டு சென்றார். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கடந்த 25ம் தேதி அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக அங்குள்ளவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள எனது மகள் இந்த செய்தி அறிந்து வேதனையில் உள்ளார். எனது மருமகனின் உடலை தாயகம் கொண்டு வர உதவி செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.