அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் மூலம் தென்னூர் – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள் உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம், தென்னூர் கிராம பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், வரதராஜன்பேட்டை பேரூராட்சி, தென்னூர் பேருந்து நிலையத்தில், தென்னூர் (வரதராஜன்பேட்டை) – வேளாங்கண்ணி புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.
அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிமிடெட், பேருந்து தடம் எண். 210A, தென்னூரில் (வரதராஜன்பேட்டை) இருந்து புறப்பட்டு ஜெயங்கொண்டம், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும் வகையில் தினசரி பேருந்து இயக்கப்படும். இப்புதியபேருந்து வழித்தடத்தினால்
தென்னூர் பகுதியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள். எனவே, இப்பேருந்து வசதியினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குநர் பொன்முடி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகப்பட்டினம் மண்டல பொது மேலாளர் ராஜா, வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்