நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்ள வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு வேதாரண்யத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் வருகின்ற டிசம்பர் 6 ம் தேதி வரை தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு இன்று காலை அண்ணாமலை சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு மெழுகுவர்த்தியும் ஏற்றிவைத்தார். அவருக்கு பாதிரியார்கள் பைபிள் கொடுத்து வாழ்த்தினர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது….
கனமழை மழை மற்றும் புயல் அறிவிப்பு காரணமாக வருகின்ற 5 ம் தேதி வரை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ம் தேதியில் இருந்து நடை பயணத்தை கடலூரில் இருந்து துவங்க உள்ளேன்.
சென்னை மழையில் கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்மட்ட அதிகாரிகள் வரை கடுமையாக உழைக்கின்றனர். இரவு நேரத்தில்
பிரச்னை என்றாலும் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் பணியாற்றுகின்றனர். சிறிய மழைக்கு தண்ணீர் தேங்குவது இல்லை, கனமழைக்கு தேங்கும் தண்ணீர் சில மணி நேரத்தில் உறிஞ்சப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு 30 மாத காலம் இருக்கிறது. அதற்குள் மழைநீர் தேங்கும் பிரச்னையை முழுவதுமாக சரி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எனக்கு அரசியல் செய்ய விரும்பவில்லை. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தமிழக முதல்வர் மட்டுமல்ல நானும் கடிதம் எழுதி வருகிறேன். இலங்கை வசம் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளுக்கு மத்திய அரசின் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் பிரச்னை தீரும். கச்சத்தீவு நம்மிடம் இல்லாத காரணத்தால் இந்திய இலங்கை எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா சட்டபேரவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். டிஆர்எஸ் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருடன் நானும் தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்துள்ளேன். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்று கூறினார்.
பின்னர் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரியமான கோரக்க சித்தர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டார். அங்கு தியான கூடத்தில் தியானத்தில் ஈடுபட்டார்.