சிறு தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இழுவைமடி வலையை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்டம் செருதூர், காமேஸ்வரம், வெள்ளப்பள்ளம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட 12 கிராம மீனவர்கள் 18 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் இழுவைமடி வலை குறித்து, பைபர் படகு மீனவர்களுடன், மீன்வளத்துறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், இன்று கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தாலுகா மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்தனர். இதையடுத்து இன்று இழுவைமடி வலையை தடை செய்ய
வலியுறுத்தி, செருதூரில் இருந்து 12,கிராமத்தைச் சேர்ந்த 1000, திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேளாங்கண்ணி நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் வேளாங்கண்ணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983, ஐ நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், கடலில் மீன் பிடிக்கும் பைபர் படகு மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கடலில் உயிரிழந்த அக்கரைப்பேட்டை ஃபைபர் படகு மீனவர்கள் இருவருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மீனவர்களின் போராட்டம் காரணமாக. DSP, பாலகிருஷ்ணன் தலைமையில் வேளாங்கண்ணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.