நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் ‘சாருகேசி’ நாடகம் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்த நாடகத்தை நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் பார்த்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘பரம ரகசியம்’ நாடகத்தை 47 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்க சென்றேன். அப்போது அரை மணி நேரம் நாடகத்தை பார்க்க காத்திருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. காலம் ஒருவரை எங்கிருந்து எப்போது எங்கு கொண்டு போகும் என தெரியாது. அதைத்தான் மகா காலம் என்று சொல்வார்கள். ஆனால் இன்று ஐம்பதாவது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் அதன் காலத்தின் விளையாட்டு.
இந்த நாடகம் படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்படி ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒய்ஜி மகேந்திரன் தான் எனது மனைவி லதாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் எனது மனைவி லதாதான்.
எனது கெட்ட நண்பர்களால் சில கெட்ட பழக்கங்கள் எனக்கு இருந்தது. நான் நடத்துனராக இருந்தபோது எவ்வளவு பாக்கெட் சிகரெட் பிடிப்பேன் என்று தெரியாது. பாயா, ஆப்பம், சிக்கன் 65 என எனது காலை உணவே அசைவத்துடன் தான் தொடங்கும். சிகரெட், மது, அசைவ உணவு ஆகிய மூன்றையும் ஒன்றாக சாப்பிடுபவர்கள் 60 வயதிற்கு மேல் இருந்தது கிடையாது. இந்த மூன்று பழக்கங்களும் கொண்ட என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. நாள்தோறும் மது, சிகரெட், மாமிசம் என இருந்தேன். சைவ பிரியர்களை பார்த்தால் பாவமாக இருக்கும். ஆனால் இதையெல்லாம் மாற்றி ஒழுக்கமாக்கியவர் எனது மனைவி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.