கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கள்ளசாராய சாவு சம்பவத்தால் சாராயம் என்ற எழுத்தை படித்தாலே மக்களுக்கு கோபமும் , அலர்ஜியும் ஏற்படுகிறது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி சாராயக்கடை சந்து என்ற தெருவின் பெயரையே மாற்றி உள்ளது என்றால், சாராய சாவு எத்தனை வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
லால்குடியில் உள்ள சிவன் கோயில் அருகே 20 வது வார்டில் உள்ள ஒரு வீதிக்கு பெயர் சாராயக்கடை சந்து. இந்த வீதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் சாராயக்கடை இருந்ததால், இந்த வீதிக்கு சாராயக்கடை சந்து என பெயர் ஏற்பட்டது. அதுவே அரசின் பதிவேட்டிலும் பதிவாகி விட்டது.
சாராயக்கடை என்ற பெயர்வேண்டாம் என இந்த வீதிக்கு ராமசாமி பிள்ளை வீதி என பெயர் மாற்றப்பட்டது. அது ஒரு சமூகத்தின் பெயராக இருந்ததால் பின்னாளில் அது பழைய பெயரான சாராயக்கடை சந்து என மீண்டும் பெயர் மாறியுள்ளது.
அரசு பதிவேட்டிலும் சாராயக்கடை சந்து என பதிவாகியுள்ளது. இந்நிலையில் சாராய சாவு ஏற்பட்டதால் இந்த வீதியின் பெயரை சிலர்
புகைப்படம் மற்றும் காட்சி வாயிலாக சமூக வலைதளங்களில் பரப்பிவிட்ட நிலையில் அது தற்போது வைரலாகி இது ஒரு பேசு பொருளாகி வருகிறது.இதனையறிந்த நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக அந்த வீதியின் பெயர் பலகையில் சாராயக்கடை என்பதை அழித்து மறைத்து வைத்துள்ளனர். எனவே அந்த தெரு இப்போது சந்து என்ற அளவில் நிற்கிறது. வரும் நாட்களில் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அந்த வீதிக்கு பெயர் மாற்றம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.
திருவள்ளுவர் தெரு, சிலப்பதிகாரத்தெரு, கம்பன் தெரு , தென்றல் தெரு, காவிரி தெரு, கரிகாலன் தெரு என எத்தனை தமிழ்மணக்கும் பெயர்கள் இருக்கும்போது அதில் ஒன்றை சூட்ட வேண்டியது தானே என அந்த பகுதி இளைஞர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.