மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை என்ற கிராமத்தில் கலைவாணன் என்பவர் நேற்று வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட நிலையில் தஞ்சைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து வெடிகுண்டு வெடித்த வீட்டை காவல்துறையினர் சீல் வைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் . தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் நடத்திய சோதனையில் வெடிக்காத 2 வெடிகுண்டுகள் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள், வெடி மருந்துகள் ஆகியவை வீட்டின் உட்புறம் மற்றும் கொல்லைப்புறத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட 2 வெடிகுண்டுகளை தண்ணீரில் போட்டு வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பெரம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தஞ்சை தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காயத்ரி தலைமையில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் வெடி மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து அதனை மேல் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட மூலப் பொருட்களுடன் ஆட்களை கொல்லும்
வகையில் உள்ளே பால்ரஸ் குண்டுகள், இரும்பு ஆணிகள் ஆகியவை வைப்பதற்கான மூலப் பொருட்களும் இருந்தது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் ஏதேனும் குற்றச்சம்பவம் நிகழ மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். ஆட்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட வெடி குண்டுகள் கிராமத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கைப்பற்றப்பட்டு இருப்பதும் தயாரித்தவர் படுகாயம் அடைந்ததும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் இடையே பரபரப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கைப்பற்ப்பட்ட வெடி குண்டுகளை செயலிழக்க செய்ய திருச்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வர உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.