திருச்சியில் நேற்றிரவு நிருபர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது.. சென்னை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாமல் போனதற்கு திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் தான் காரணம் என விஜய் கூறியிருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுப்படுத்தியிருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கும் அளவுக்கு நானோ அல்லது விசிகவோ பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த நிகழ்வின் நான் பங்கேற்காமல் போனதற்கு விஜய் காரணமில்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்த விதமான சிக்கலும் இல்லை. ஆனால், நாங்கள் பங்கேற்க போகிறோம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலேயே, அதற்கு அரசியல் சாயம் பூச சிலர் முயற்சித்தனர். அதை ஆராய வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள் என்பது முக்கியமானது. ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் அரசியல் களத்தில் நாங்கள் இருக்கிறோம். ஓரளவுக்கு எங்களாலும் யூகிக்க முடியும். அந்த வகையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கிவிடுவார்கள். அப்படி அரசியலாக்குவதை நான் விரும்பவில்லை. தமிழகத்தில் எங்கள் கூட்டணியை குறிவைத்து காய் நகர்த்தும் அரசியல் நடக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு தர நான் விரும்பவில்லை. இது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. நல்லெண்ணத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு. விசிக அங்கம் வகிக்கும் கூட்டணி சிதையாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நான் எடுத்த முடிவு. இதில் திமுக எந்த வகையிலும் தலையிடவில்லை என்றார். அதேபோல புத்தக வெளியீட்டு விழாவில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 2026ல் தமிழகத்தில் மன்னார் ஆட்சி ஒழிக்கப்பட்டும் என கூறியிருக்கிறாரே? என்கிற கேள்விக்கு ‘ மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு விட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் வாய்ஸ் ஆஃப் காமன்’ என்ற நிறுவனத்தின் அடிப்படையில் தான் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறியிருக்கும் கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவரின் தனிப்பட்ட கருத்து சுதந்திரம்” என்றார்.
நடிகர் விஜய்-ஆதவா அர்ஜூனா ஆகியோரின் மேடை பேச்சுக்கு திருமா மறுப்பு..
- by Authour
