விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், அந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது.
அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு – என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி” என்று கடந்த செப்.12-ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் இன்று காலை, “2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விசிக. இடங்கள் ஒதுக்கீடு அல்ல; அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்” என அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் அக்.2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபடியே, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும், தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் அவரது பழைய பேச்சு அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் அதனை உடனடியாக நீக்கியதும் கவனம் பெற்றது. அந்த வீடியோவை திருமா மீண்டும் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.