Skip to content

தமிழக அரசுக்கு எதிராக 8ம்தேதி ஆர்ப்பாட்டம்..

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை.. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள், பட்டியலின மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரும் வழக்கம்போல பாதிக்கப்பட்ட எளிய பட்டியலின மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சாதிவெறியர்களின் கல்வீச்சிலும் காவல்துறையினரின் தடியடி தாக்குதலிலும் படுகாயமடைந்த பட்டியல் இனத்தவர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர். கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவில் பட்டியலினத்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரும் பங்கேற்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால், இந்த ஆண்டு திருவிழாவில் பட்டியலின மக்கள் பங்கேற்க கூடாது என பாமக தரப்பைச் சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் கடந்த மே 2ம் தேதியன்று இருதரப்பினரையும் அழைத்து அமைதிக்கான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை. எனவே, தேரோட்டம் – திருவிழா நடத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனாலும் பட்டியின வாலிபர் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நடந்த சம்பவங்களில்  சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ‘மற்றும் பலர்’ என்னும் பெயரில் பட்டியலின இளைஞர்களைக் கைது செய்வதில் காவல்துறையினர் இன்னும் தீவிரம் தீட்டிவருகின்றனர். காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், மாரியம்மன் கோயிலில் ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையினை வலியுறுத்தி மே 8ம் தேதி புதன் கிழமையன்று சேலத்தில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!