விசிகவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பல அதிரடியான கருத்துக்களை தெரிவித்தார். அதில் குறிப்பாக கவனம் பெற்றுள்ள ஒன்று, தவெகவுடன் கூட்டணி அமைத்தால் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்பதுதான். விசிக உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாக இருந்து வருவதும் இதுதான். காலம் காலமாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகள் மற்றக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும், ஒரு சீட்டு – 2 சீட்டுகள் ஒதுக்குவதோடு தங்களது கூட்டணி தர்மம் முடிந்துவிட்டதாக கருதுகின்றனர்.
இந்த நிலையில் விஜயின் இந்த அறிவிப்பு பல கட்சியினரிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விஜய்யின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள்.
‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.