Skip to content
Home » வாயு கசிவு… மயங்கி விழுந்த பொதுமக்கள்…. அமைச்சர் மா.சு நலம் விசாரிப்பு…

வாயு கசிவு… மயங்கி விழுந்த பொதுமக்கள்…. அமைச்சர் மா.சு நலம் விசாரிப்பு…

வடசென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் என்ற தனியார் உரத்தொழிற்சாலை உள்ளது. இதற்கு கப்பல் மூலமாக ஏற்றிவரப்படும் திரவ அமோனியா வாயு குழாய்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அந்த குழாய்களின் வழியாக திடீரென ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால்,அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. காற்றில் கலந்து வந்த நெடியும் மக்களை பெரிதும் துன்பத்துக்குள்ளாகியது.

இந்த ரசாயன வாயுவைச் சுவாசித்ததால்  அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர்  கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலரும் மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பீதியில் மக்கள்
நள்ளிரவில் திடீரென இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், பெரியகுப்பம் மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில் திரண்டனர். இதனால் ஏற்பட்ட பீதியால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

அம்மக்களை அரசு அதிகாரிகள் ஆறுதல்படுத்தி தனியார் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைத்துள்ளனர். வாயு கசிவுக்கு உள்ளான குழாய் கண்டுபிடிக்கப்பட்டு வாயுக்கசிவு உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப செல்லத் தொடங்கியுள்ளனர். அத்துடன் கோரமண்டல் ஆலை முன்பாக திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அம்மக்களை சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்தநிலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் வருபவர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்து வருகிறார்.  ஆலையை மூட வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *