கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளது. சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோண்ட தோண்ட உடல்கள் கண்டெட்டுக்கப்படுவதால் மீட்புக்குழுவினரே திகைத்துப்போயுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்றே தெரியாத சூழல் உள்ளது. பலர் தங்களது உறவுகளைக் காணவில்லை என அழுது புலம்பும் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கிறது.
இதனிடையே பெரும் பேரிடரால் நிலைகுலைந்து போயுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிக்காக ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார். மேலும் முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
தமிழ்நாடு அரசின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு.சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் 10 மருத்துவர்கள் செவிலியர்கள் , ஒரு இணை இயக்குநர் தலைமையில் 20 தீயணைப்பு வீரர்கள் , ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 20 மாநில பேரிடர் மேலாண்மைக் மீட்புக் குழு வீரர்கள் அடங்கிய குழு 2 வாகனங்களில் கேரளா சென்றடைந்திருக்கிறது.
வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த குழு அளிக்கும் தலவலின் பேரில் மேலும் உதவி தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் மீட்புக் குழுக்கள் மற்றும் உதவிகள் செய்யப்படுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.