கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிவாரண பணிகளுக்காக உதவுமாறு கேரள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் பலரும் கேரள முதல்வரின் பேரிடர் நிவார நிதிக்கு உதவி வருகின்றனர். முன்னதாக தமிழக அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இதேபோல் தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 1 கோடியும், அதிமுக சார்பில் ரூ.1 கோடியும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்களை பொருத்தவரையில் முதல் ஆளாக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண உதவியை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது நடிகர்கள், சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சத்தை நிவராண நிதியாக கேரளாவுக்கு வழங்கியுள்ளனர். முன்னதாக வயநாடு நிலச்சரிவு குறித்து நடிகர் சூர்யா எக்ஸ் தளத்தில் வேதனை தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், “வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கு தலைவணங்குகிறேன்!”என்று குறிப்பிட்டிருந்தார்.