கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய 3 கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து போயுள்ளன. நிலச்சரிவில் தற்போது வரை 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 700 க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்று தெரியவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 3069 பேர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கேரளாவில் தொடந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் சவாலாகியுள்ளது. பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பேரிடர் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவ முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவியை கேரள முதலமைச்சரின் பொது நிவாரணத்திற்கு வழங்கினார். முன்னதாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதியை கேரளா முதலமைச்சர் பிரனாயி விஜயனை சந்தித்து காசோலையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.