தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள திட்டத்தின் கீழ் மூன்று மாதம் நடந்த விவசாயிகளுக்கான வயல் வெளிப்பள்ளி பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் வயல் தினவிழா நடந்தது. திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா பேசுகையில்: தற்பொழுது நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. நெல்லுக்கு பின் சோயா பீன்ஸ் சாகுபடியும் அரசு மூலம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென உளுந்து மற்றும் சோயா விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட ஏதுவாக அனைத்து விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து சாகுபடி மேற்கொண்டு அதிக லாபம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், உதவி வேளாண் அலுவலர் கவிதா ஆகியோர் செய்து இருந்தனர்.