கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வந்துள்ளார். இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
இந்நிலையில் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதல்வரிடம் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவையின் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
கோவையில் தங்க நகை தொழிற்பூங்கா அமைப்பதன் மூலம் தங்க நகை தொழில் வளர்ச்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேன்மை அடையும் என்பதால் அந்த உத்தரவை விரைந்து அறிவிக்க வேண்டும், நகைகள் உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருளான தங்கத்தை வாங்குவதற்கு தங்க தொழிலாளர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் தமிழக அரசு பொற்கொல்லர் நல வாரியமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதை மாற்றி ஐந்தொழில் நல வாரியமாக அமைக்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தங்க நகை தொழில் புரியும் விஸ்வகர்மா இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.