பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம்(78) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். குடியரசு தினத்தையொட்டி வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.
தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். 1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகியாக தேசிய விருது பெற்றவர் வாணி ஜெயராம்.
தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தமிழில் 1973-ம் ஆண்டில் வெளிவந்த தாயும் சேயும் படத்தில் வாணி ஜெயராம் பாடகியாக அறிமுகமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.