தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார், வால்பாறை, டாப்ஸ்லிப்,கவியருவி பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்கள் உள்ளன.இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.
தற்போது பள்ளி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஆழியார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.இதற்கிடையே ஆழியார் வால்பாறை சாலையில் கடந்த சில நாட்களாக ச சுள்ளி கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை உலா வருகிறது.
தற்போது பொள்ளாச்சி அடுத்த ஆழியார் சின்னார்பதி அருகே உலா வரும் காட்டு யானையால் சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவ்வப்போது பகல் நேரங்களில் சுள்ளி கொம்பன் யானை உலா வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வனத்துறையினர் ஒற்றை யானையை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் யானை பொதுமக்கள் பயணிக்கும் பிரதான சாலையில் உலா வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு மருத்துவ அவசர தேவைகள், அரசு அலுவலகள்,வணிகம், பள்ளி – கல்லூரி வேலை உள்ளிட்டவைகளுக்கு செல்வோரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.