Skip to content
Home » வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

வள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர், முதல்வர் வெளியிட்டார்

  • by Authour

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில்  உலகுக்கு பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசால்  வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது.

நேற்று கன்னியாகுமரியில்  வெள்ளிவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்க நேற்று குமரி வந்த முதல்வர்  மு.க.ஸ் டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபால கல்வெட்டையும், பாலத்தையும்  முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அந்த பாலத்தில் நடந்து சென்று, பாலத்தில் பதிக்கப்பட்டு இருந்த கண்ணாடி வழியாக கடல் அழகினை ரசித்தார்.

அதன் பிறகு அதே பாலத்தின் வழியாக திரும்ப வந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள மேல்பகுதிக்கு சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு திருவள்ளுவர் சிலையின் பாதத்தை தொட்டு வணங்கினார்.

2ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள  பிரமாண்டமான  பந்தலில் விழா  நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. வெள்ளி விழா சிறப்பு மலரை முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை சிங்கப்பூர் அரசின் மந்திரி சண்முகம் பெற்றுக் கொள்கிறார்.

பின்னர் தினம் ஒரு திருக்குறள் நூலின் புதிய பதிப்பை சிங்கப்பூர் மந்திரி சண்முகம் வெளியிடுகிறார். இதனையடுத்து அய்யன் திருவள்ளுவர் பசுமைப் பூங்காவை திறந்தும், திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தும், திருவள்ளுவர் தோரணவாயிலுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் சாலைக்கு திருவள்ளுவர் பெயரையும் முதல்வர்  மு.க. ஸ்டாலின் சூட்டுகிறார்.

விழாவின்  முத்தாய்ப்பாக  திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி முதல்வர்  மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். அத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. காலை 11 மணிக்கு அவர் கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.