திருச்சி மாவட்டம் அயன்புதுப்பட்டியை சேர்ந்தவர் பிச்சை. கூலித்தொழிலாளி. இவரது மனைவி அகிலாண்டேஸ்வரி. இவர்களது மகள்கள் வித்யா (21), காயத்திரி (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அயன்புதுப்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யாவும், காயத்திரியும் சொந்த ஊருக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரி, அவர்கள் 2 பேரிடமும் விசாரித்துள்ளார். அப்போது காங்கேயத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரை காயத்திரியும் காதலித்து வருவதாக கூறியுள்ளனர். மகள்களின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2 பேரையும் அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டைவிட்டு வெளியே சென்ற வித்யாவும், காயத்திரியும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் கரையில் 2 செல்போன்கள் கிடந்ததை, அப்பகுதியில் மாடு மேய்த்தவர்கள் பார்த்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், கிணற்றுக்குள் பார்த்தபோது, தண்ணீரில் ஒரு பெண் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி அவர்கள் உடனடியாக வளநாடு போலீசார் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணின் உடலையும், தண்ணீருக்கடியில் கிடந்த மற்றொரு பெண்ணின் உடலையும் மீட்டனர். விசாரணையில் அவர்கள் மேற்படி அக்காள், தங்கைளான வித்யா, காயத்திரி என்பது தெரியவந்தது. போலீசார் விசாரணை இதைத்தொடர்ந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் கண்டித்ததால் சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வித்யா, காயத்திரி ஆகியோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.