நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆரோக்கியமாதாவின் அருளை பெற உலகெங்கிலும் இருந்து மக்கள் வேளாங்கண்ணிக்கு வருகிறார்கள். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். பல்வேறு சிறப்புகளை கொண்ட வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ந் தேதி மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (வியாழக்கிழமை) மாலை நடெபெறுகிறது. தேர்பவனியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணி வந்துள்ளனர். தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகம், கோவா, மும்பை, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவிழாவையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் 8-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. நாளை இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.