இயேசு பிரானின் தாயார் மேரி மாதாவின் அவதார திருநாள் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 10 நாட்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பசிலிக்காவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடி ஊர்வலத்துடன் தொடங்கியது, தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் ஆசி வழங்கி கொடியேற்றினார். அப்போது வாணவேடிக்கைகள் நடந்தது. முன்னதாக கொடி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கொடியேற்றத்தை தொடர்ந்து ஆராதனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணி நகரமே மாதா பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
விழா நாட்களில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கனி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறும். அனைத்து நவ நாட்களிலும் இரவு 8 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் தேர் பவனி நடைபெறும்.