நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் பல நாட்கள் தங்கி இருப்பார்கள். அப்படி தனியார் விடுதியில் தங்கியிருந்த 2 நபர்களை இன்று போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த காரை சோதனை செய்தபோது அதில் 82 பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பொட்டலங்களில் ஹசீஸ் என்னும் விலை உயர்ந்த போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கஞ்சா எண்ணெய் என்றும் கூறுகிறார்கள். செறிவூட்டப்பட்ட கஞ்சாவில் இருந்து இவற்றை தயாரிக்கிறார்கள். இதன் மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த போதைப்பொருளை இன்று இரவு வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
இந்த போதை பொருள் விவகாரத்தில் தேனியை சேர்ந்த ஒரு முக்கியபுள்ளிக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதன் பேரில் அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.