Skip to content
Home » வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

வைகுண்ட ஏகாதசி…….ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து விழா தொடங்கியது

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நேற்று மாலை தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று  திருமொழி திருவிழா தொடங்கியது.

அதிகாலை 5.30 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து  உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.  நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தினஅபயஹஸ்தம், காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காலை 7.15 மணி முதல் காலை 11.30 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவர். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (ஜனவரி1-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஜனவரி 2-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார் இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!