மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா ,இன்று காலமானார். அவரது உடலுக்கு வைகோ, அவரது மகன் துரைவைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சங்கரய்யா மறைவுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்று முன்தினம் (13.11.2023) மருத்துவமனையில் அவரை சந்தித்து தோழர்களிடமும், குடும்பத்தினர்களிடமும் நலன் விசாரித்தபோது, எப்படியும் அவர் பிழைத்துக் கொள்வார். நீண்ட காலம் நம்மோடு வாழ்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.
2021 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தியபோது, விருதுடன் சேர்த்து வழங்கிய பத்து லட்சம் ரூபாய் நிதியினை முதல்வரின் கோவிட் நிவாரண நிதிக்கு வழங்கினார் சங்கரய்யா. இதனைப்போலவே 1972 ம் ஆண்டில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான நிதியை அரசு வழங்கியபோது, ‘நாட்டு விடுதலைக்காக நாங்கள் போராடினோம். பென்சன் தொகைக்காக அல்ல’ என்று குறிப்பிட்டு அதனையும் அரசுக்கே திருப்பி வழங்கினார்.
இத்தகைய பல்வேறு சிறப்புக்களின் கொள்கலனாக திகழ்ந்த பெருமைக்குரிய லட்சியப் போராளியான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது. அவரது பிரிவால் துயரம் அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.