தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரயை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மக்களிடம் மதிமுக கையெழுத்து வாங்கியது. 57 எம்.பிக்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் இந்த கையெழுத்துக்கள் வாங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழ்நாடு அரசுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வருவதால், அவரை தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், 57 எம்.பி.க்கள் உள்ளிட்ட 50 லட்சம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.
அவற்றை அட்டைப் பெட்டிகளில் வைத்து, ரயிலில் கொண்டுவந்து, இன்று 20.9.2023 பகல் 12 மணி அளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கணேசமூர்த்தி எம்.பி., ஆகியோர் குடியரசுத் மாளிகை அலுவலகத்தில் இன்று ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கை:
50 லட்சம் கையெழுத்து படிவங்களை ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைத்தோம். எங்கள் கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பப்படும் என்றும், அவர் தருகின்ற பதிலை உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம் என்றும் அங்குள்ள அதிகாரிகள் உறுதி கூறினார்கள்.
கையெழுத்திட்ட அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு தரப்பில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் இந்த செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இரண்டு மாத காலம் இதற்காகப் பாடுபட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.