தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத விசாக நட்சத்திர நாள் ‘வைகாசி விசாக’ திருவிழாவாக அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்சோலை. சுவாமிமலை, வடபழனி, வயலூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் இன்று அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். புனித நீராடி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகாசி விசாகம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்தும், அலகு குத்தியும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். வைகாசி விசாகத்தை யொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.