“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி காலை வெகுவிமரிசையாக நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருனார் காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவணி வந்தார். கோவிந்தா…கோவிந்தா… கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.பச்சை பட்டுடுத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக்குதிரையில் வீரராகப்பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
முன்னதாக கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகையில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேர்ந்து வைகை ஆற்றில் இறங்குவதே ஐதீகம்.புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்து தரிசனம் பெற்றனர். அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலத்துடன் உள்ளது.